தலிபான் தலைவர் முல்லா உமர் படுகொலை!

Tuesday, May 24, 2011

தலிபான் தலைவர் முல்லா உமர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து பதற்றம் பரவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை நடந்த தலிபான் ஆட்சியில் தலைவராக இருந்தவர் முல்லா உமர்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை ஆப்கானிஸ்தானில் கடந்த 2001ம் ஆண்டு புகுந்து தாக்குதல் நடத்தியதால், அவர் பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து தலிபான் இயக்கத்தை நடத்தி வந்தார்.

பாகிஸ்தானின் குவெட்டா நகரிலிருந்து வசிரிஸ்தான் பகுதிக்கு இன்று திரும்பிக் கொண்டிருந்த முல்லா உமர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானில் உள்ள டோலோ டி.வி. செய்தி வெளியிட்டது.

இதை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். ஆனால் முல்லா உமரை யார், எப்படி கொன்றனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. 

அல்கெய்தா அமைப்பின் தலைவர் பின்லேடன், பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் கடந்த 2ம் தேதி அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் பாகிஸ்தானில் இருப்பதாக தகவல் கிடைத்தால், அபோதாபாத் தாக்குதல் போல மீண்டும் ஒரு தாக்குதலை அமெரிக்கப் படை நடத்தும் என அதிபர் ஒபாமா நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில் முல்லா உமர் மரணம் பற்றிய தகவல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலிபான் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளது.