ஒசாமா கொலைக்குப்பின்"வைரஸ்' பரப்பும் கும்பல்

Tuesday, May 3, 2011

வாஷிங்டன்:"ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட பின், சைபர் கிரிமினல்கள் எனப்படும், இணையதளத் திருடர்கள், பல்வேறு வழிகளில் இணையதளங்கள் மற்றும் தனி நபர் கணினிகளுக்குள் புகுந்து, "வைரசை'ப் பரப்பி வருகின்றனர். இதனால், கணினிப் பயன்படுத்துவோர் கவனத்துடன் இருக்க வேண்டும்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.பாகிஸ்தானின் அபோதாபாத்தில், ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்த 12 மணி நேரத்துக்குள், உலகம் முழுவதும் உள்ள கணினிகளில் பல்வேறு விதமான, "வைரஸ்'கள் பரவுவதை நிபுணர்கள் கண்டறிந்தனர்.
இவர்கள், பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பற்றிய வார்த்தைகள், படங்கள், வீடியோக்கள், "லிங்க்' எனப்படும் இணைப்புகளின் மூலம், "வைரஸ்'களைப் பரப்பி வருகின்றனர். இந்த, "வைரஸ்'கள், கணினிகளின் செயல்பாட்டையே நிறுத்திவிடும் தன்மை கொண்டவை.அது மட்டுமல்லாமல், பி.பி.சி., - ஏ.பி.சி., - சி.என்.என்., போன்ற பிரபல செய்தி நிறுவனங்களின் பெயர்களையும் இணையதளத் திருடர்கள் பயன்படுத்துகின்றனர்."கூகுள்' இணையதளத்தில் படங்களைத் தேடும் பகுதியில் சில, "வைரஸ்' பரப்பும் படங்களை இணைத்து அவற்றின் மூலமும் வெகுவேகமாக, "வைரஸ்'களைப் பரப்பி வருகின்றனர்.
அதனால், "பெஸ்ட் ஆன்ட்டி வைரஸ் 2011', இஸ்லாமாபாத், அல்-குவைதா, நேவி சீல்ஸ், ஒபாமா அட்ரஸ், ஒசாமா பின்லாடன் டெட், ஒசாமா பின்லாடன் டெட் 2011, ஒசாமா பின்லாடன் டெட் ஆர் அலைவ் ஆகிய வார்த்தைகளுடன் கூடிய படங்கள், இணையதளங்கள், செய்தித் துணுக்குகள் மற்றும், "லிங்க்' வந்தால், அவற்றை, "க்ளிக்' செய்து தொடர வேண்டாம் என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற வைரஸ்களை, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் வழியாகவும் இணையதளத் திருடர்கள் பரப்பி வருவதால், அந்த சமூக இணையதளங்களில் இருப்பவர்கள் செய்திகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.குறிப்பாக பேஸ்புக்கில் வரும் விளம்பரங்கள் விஷயத்தில் கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.இந்த, "வைரஸ்'களைத் தடுக்க, தனி நபர்கள் தங்கள் கணினிகளில், தரம் வாய்ந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களைப் பதிவிட வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பிரிட்டன் இளவரசர் வில்லியம் திருமணம், ஜப்பான் சுனாமி ஆகிய சம்பவங்களின் போதும் இதுபோன்ற, "வைரஸ்' பரப்பல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒசாமாவை சுட்டது யார்?:ஒசாமா பின்லாடனுடன், அமெரிக்க வீரர்கள், 40 நிமிடங்கள் துப்பாக்கிச் சண்டை நடத்தினர் என்றும், அப்போது, அவரது தலையில், ஒன்று அல்லது இரண்டு குண்டுகள் பாய்ந்து அவர் இறந்து போனார் என்றும், அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.ஆனால், பாகிஸ்தானில் இருந்து வெளிவரும், "டான்' பத்திரிகையில் இதுகுறித்து கூறப்பட்டிருப்பதாவது:பின்லாடன் உடல், அமெரிக்க வீரர்களால் எடுத்துச் செல்லப்பட்ட பின், அந்த வீட்டுக்குச் சென்று சோதனையிட்ட அதிகாரி ஒருவர், இது குறித்து கூறுகையில், "அவர் அருகில் இருந்து சுடப்பட்டு செத்தவராகத் தெரியவில்லை. அவரது பாதுகாப்பு வீரர் ஒருவரால் சுடப்பட்டிருக்கலாம். அமெரிக்காவின் கையில், அவர் சிக்காமல் இருப்பதற்காக, இப்படி செய்திருக்கலாம்' என தெரிவித்தார்.இவ்வாறு, "டான்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
* சண்டை முடிந்தவுடன், பின்லாடன் உடலை மட்டும் அமெரிக்க வீரர்கள் எடுத்துச் சென்றனர்.* அவருடன் பலியான ஒரு பெண் அவரது மகன் மற்றும் பணியாளர்கள் உடல்களை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர். பலியான பெண் பின்லாடனின் மனைவி இல்லை என, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.* பின்லாடனின் ஒரு பாதுகாப்பு வீரரின் உடல், வளாகத்தின் உள்ளும், மற்ற இருவரின் உடல்கள், வீட்டின் உள்ளும் கண்டெடுக்கப்பட்டன.* காயம்பட்ட மற்றொரு பெண், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.* அபோதாபாத் வீட்டில் இருந்த மற்ற ஒன்பது சிறுவர்கள் மற்றும் சிறுமியர் பாக்., போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.* இவர்கள் அனைவரும், இரண்டில் இருந்து, 12 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் பின்லாடனின், 11 வயது மகளும் உண்டு.* சண்டை துவங்குவதற்கு முன், முதலில் வந்த ஹெலிகாப்டர், பின்லாடன் தரப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வந்த தகவலை மறுத்துள்ள பாக்., அதிகாரிகள், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.* அபோதாபாத் வீட்டை ஐந்தாண்டுகளுக்கு முன்பு கட்டிய, வாசிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த நபரை, பாக்., பாதுகாப்பு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மகிழ்ச்சியில் மிதந்த ஒபாமா
* அபோதாபாத் வீட்டில் நடந்த சண்டையை, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள, "சிச்சுவேஷன்' அறையில் இருந்தபடி ஒவ்வொரு நிமிடமும் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.* அமெரிக்க வீரர்கள், அந்த வீட்டை முழுமையாகத் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்த போது, ஒபாமா உட்பட அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.* தாக்குதல் நடவடிக்கை முடிந்த உடன், "நாம் அவரைப் பிடித்து விட்டோம்' என, ஒபாமா அருகில் இருந்தவர்களிடம் சொன்னாராம்.* அபோதாபாத் வீட்டை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து வைத்திருந்த அமெரிக்க அதிகாரிகள், அதைப் போலவே ஒரு செட்டிங் அமைத்து அங்கு வீரர்களுடன், ஏப்ரல் மாதத்தில் பலமுறை ஒத்திகை நடத்திப் பார்த்துள்ளனர்.* "பின்லாடனின் டி.என்.ஏ., ஆய்வறிக்கை, 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரங்கள், பின்லாடன் மற்றும் அவரது உறவினர்களின் டி.என்.ஏ.,க்களுடன் பொருந்திப் போகிறது' என, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
* பின்லாடன் தங்கள் நாட்டில் தான் இருந்திருக்கிறான் என்பதைக் கூட, பாகிஸ்தான் அரசால் கண்டுபிடிக்க முடியவில்லையே என, அந்நாட்டுப் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்துள்ளன.* "பாக்., அரசு, தன் மண்ணில் வாழ்ந்த பின்லாடனைத் தானே வேட்டையாடியிருக்க வேண்டும். அல்-குவைதாவால் அமெரிக்கா மட்டுமல்லாமல் பிற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன' என்று ஒரு பத்திரிகை கூறியுள்ளது.* "பல ஆண்டுகளாக பாக்., அரசு மறுத்து வந்த போதிலும் இறுதியில் பின்லாடன் பாகிஸ்தானில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். இன்னும் பல நகரங்களில் முக்கிய பயங்கரவாதிகள் தங்கியிருக்கக் கூடும்' என, மற்றொரு பத்திரிகை தெரிவித்துள்ளது.* பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது தூதரகத்தையும், பெஷாவர், லாகூர், கராச்சி ஆகிய நகரங்களில் இருந்த துணைத் தூதரகங்களையும் அமெரிக்கா இழுத்து மூடிவிட்டது