அபிவிருத்திப் பாதையில் இலங்கை சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள்

Tuesday, September 7, 2010

 இலங்கை நாடானது சுற்றுலாத்துறைக்கு சிறந்த ஓர் இடமாகவும் உல்லாசப்பயணிகள் விரும்பி வரும் நாடாகவும் உள்ளது. கடந்த காலங்களில் நிலவிய போர்ச்சூழலிலும் யுத்தம் இடம்பெறாத ஏனைய இடங்களுக்கு வந்து போவதை உல்லாசப்பயணிகள் விரும்பியிருந்ததை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்தோம்.

எனினும் உல்லாசப்பயணிகள் அதிகம் விரும்பும் கரையோரப்பிரதேசங்களில் அவர்களுக்கு ஏற்ற சூழல் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே. குறிப்பாக பெருநகரங்களை அண்டிய கரையோரப்பகுதி ஹோட்டல்கள் அதற்கேற்ற சூழலில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி கவனிக்க வேண்டியுள்ளது.

தமது விடுமுறை காலத்தை அமைதியாகவும் இரம்மியமான இடத்தில் கழிக்கவுமே உல்லாசப்பயணிகள் விரும்புவர். ஒரு சில கரையோரப்பிரதேச ஹோட்டல்கள் அழகிய சூழலில் அமைக்கப்பட்டிருந்தாலும் வாகன இரைச்சல், அசுத்தமான சூழல், பிரதேசத்தை அண்டிய பகுதி மக்கள் சிறுவர்களின் தொல்லைகள், சிறு வியாபாரிகளின் அத்துமீறல்,போதை பொருள் பாவனையாளர்கள், திருடர்கள் என பல இன்னல்களுக்கு உல்லாசப்பயணிகள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

இவற்றை எப்படி தவிர்ப்பது என்பது பற்றிய ஆய்வுகள் அவசியம். உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் எந்தளவிற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றதோ அதே போல் அதை பாதுகாக்கவும் தூரநோக்கு செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறான சூழலில் நாம் உல்லாசப்பயணிகள் அதிகம் வருகை தரும் கடற்கரை பகுதியான ஹிக்கடுவைக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. “சுற்றுலாப் பருவமான கடந்த நவம்பர் மாதம் முதல் இவ்வருடத்தின் ஏப்பிரல் வரையான காலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 35 சதவீதத்தால் அதிகரித்துள்ளது . அதுமாத்திரமல்ல இலங்கையை உலகிலுள்ள பாதுகாப்பான மற்றும் பிரபல்யமிக்க சுற்றுலா கேந்திரஸ்தலமாக டைம்ஸ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. என்கின்றார் ஹிக்கடுவை கொரல் சாண்ட் ஹோட்டல் தலைவரும் ஹிக்கடுவை சுற்றுலா ஹோட்டல் சங்கத்தின் உப தலைவருமான சுமேத குலதுங்க.

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை மற்றும் சுனாமி அனர்த்தத்தினாலும் பின்னடைவை சந்தித்திருந்த இலங்கையின் சுற்றுலாத்துறையானது தற்போது படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகின்றமைக்கு இது நல்லதொரு சான்று.

இலங்கையின் தென் பகுதியிலுள்ள சுற்றுலாத்தளங்களாக மாத்தறை,ஹிக்கடுவை,மிரிச,அம்பாந்தோட்டை பெரிதும் பிரபல்யம் பெற்றவை. இயற்கையின் வனப்பு கொட்டிக்கிடக்கும் இந்த இடங்களின் அழகை ரசிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றதாக இங்கு சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்டிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் சுற்றுலாசபையால் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல்களிலுள்ள மொத்த அறைகள் 14ஆயிரம் ஆகும். இதுவரை 6 இலட்சம் சுற்றுலாபயணிகள் இந்த அறைகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிக்கடுவையில் மாத்திரம் 1000 அறைகள் உள்ளதாக கூறப்படுகின்றது .ஆனால் அவற்றில் 200 அறைகள் மாத்திரமே அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதாக ஹிக்கடுவையிலுள்ள சுற்றுலா ஹோட்டல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஹிக்கடுவையிலுள்ள 60 சதவீதமான மக்கள் சுற்றுலாத்துறைச்சார் தொழில்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர். இவர்கள் ஹோட்டல்கள், விடுதி,கடைகள் மூலம் வருமானம் ஈட்டுவதோடு சுற்றுலாவழிகாட்டி, படகோட்டி,டெக்ஸி,முச்சக்கரவண்டிகள் சாரதிகள் என பல்வேறு தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

அதிகளவு சுற்றுலாபயணிகள் வரும் நாடுகள்

டென்மார்க்,சுவீடன்,நோர்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக ஹிக்கடுவைக்கு சுற்றுலாவை மேற்கொள்கின்றனர். அதேபோல் ஜேர்மன், பிரான்ஸ்,ரஷ்யா நாட்டவர்களும் தென் பகுதிக்கு அதிகளவில் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஹிக்கடுவை ஹோட்டல்களிலுள்ள 70 அறைகளும் அடுத்த பருவக்காலத்துக்காக ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஹோட்டல் துறையினர் அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் இலங்கையிலுள்ள ஹோட்டல்கள் சுற்றுலாபயணிகளுக்கு போதியதாக இருக்காது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுற்றுலாபயணிகளை அதிகரிக்க அரசு திட்டம்

இதேவேளை 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு 2மில்லியன் சுற்றுலாப்பயணிகளை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசு அடுத்த வருடம் விசிட் ஸ்ரீலங்கா என்ற நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதேபோல் அடுத்த மாதம் இந்திய திரைப்படவிருது வழங்கல் விழா இங்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் அதிகளவான சுற்றுலாபயணிகள் வருவார்கள் என நம்பபடுகின்றது. அதேபோல் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை இங்கு நடத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

சுற்றுலாத்துறையில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

இலங்கை சுற்றுலாச்சபைக்கான தலைவரோ அல்லது செயலாளரோ இதுவரை நியமிக்கப்படாமையால் ஹோட்டல் துறையினர் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக சுமேத குலதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

சுற்றுலாத்துறை தொடர்பில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வரும் போது அதற்கேற்ப பிரச்சினைகளும் தலைதூக்கத் தான் செய்கின்றன. சுற்றுலாத்துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு விசேட மின்சார கட்டணமொன்றை அறவிடுவதற்கான நடவடிக்கையை மின்வலு எரிசக்தி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. இது எம்மை மேலும் பாதிக்கும் செயலாக அமைகின்றது.

சுற்றுலாபயணிகள் எதிர்நோக்கும் சிரமங்கள்

ஹிக்கடுவைக்கு சுற்றுலாப்பயணிகள் வரவிரும்பாமைக்கான காரணம் அங்குள்ள ஹோட்டல்கள் பாதையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளமையே ஆகும். வாகனங்களில் இரைச்சல் சத்தம் அதிகம் .அதனால் அவர்கள் அமைதியாக பொழுதைப்போக்குவதற்கான சூழல் அங்கு இல்லை என ஹிக்கடுவை சுழியோட்டி பாடசாலை அதிபர் சோமதாஸ தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- இந்த கடற்கரையில் பவளப்பாறைகள் மீன்கள் மற்றும் கடல்ஆமைகளை அதிகமாக இருக்கின்றன .சுற்றுலாபயணிகள் இதனை பெரிதும் ரசித்து மகிழ்கின்றனர. இந்த அழகில் சுற்றுலாபயணிகள் மெய்மறந்து இருக்கும் போது படகோட்டிகள் அந்த மக்களை முட்டிமோதிச் செல்கின்றனர்.இதனால் இவர்கள் காயத்துக்குள்ளான சந்தர்ப்பங்களும் உள்ளன. கடலுக்குள் இறங்கினால் படகில்; முட்டிமோத வேண்டியுள்ளது.வீதிக்கு சென்றால் வாகனத்தில் முட்டிமோத வேண்டியுள்ளது என சுற்றுலாபயணிகள் தெரிவிக்கின்றனர். ஹோட்டல் துறையினரின் எதிர்பார்ப்புகள்

அதிக வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய துறையிது.இதனை அபிவிருத்தி செய்வதற்கு அரசு உதவும் பட்சத்தில் சுற்றுலாபயணிகளின் வருகையை அதிகரிக்க கூடியதாக இருக்கும் என தெரிவிக்கும் மிரிச பாம் ரெஸ்ட் ஹோட்டல் உரிமையாளர் எட்வின் சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இந்த இலக்கை அடைந்துக் கொள்வதற்கு ஹோட்டல் துறையினருக்கு கடன்வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் பொருட்களை இறக்குமதி செய்வதில் வரிசலுகைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதேபோல் இந்த துறையில் ஈபடுவோருக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும்.சர்வதேச தரத்துக்கேற்ப பயிற்சிகள் வழங்குவதன் மூலம் சுற்றுலாபயணிகளுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க கூடியதாக இருக்கும்.

இதேவேளை மிரிச கடற்பரப்பில் அதிகளவான திமிங்கிலமும் டொல்பின்களும் உள்ளன.இவற்றை முறையாக பாதுகாப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளிடமிருந்து அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆகவே இதனை பாதுகாப்பதற்கான உதவிகளை அரசு வழங்க வேண்டும்.

அதேவேளை எமது நாட்டு சிற்பிகளின் கை வண்ணத்தால் உருவாக்கப்படும் சிற்பங்களை சுற்றுலாபயணிகள் விரும்பி வாங்குகின்றனர். ஹிக்கடுவையில், நிமால் வுட்காவிங் சென்டர் உரிமையாளர் நிமால் பாரம்பரிய சிற்பகலையை மேற்கொண்டு வருகின்றார். முகமூடி,யாணை மற்றும் கிருஷ்ணரின் சிலைகளை வாங்குவதற்கு சுற்றுலாபயணிகள் ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கும் இவர்.இலங்கை மரக்கூட்டுத்தாபனத்தால் காலதாமதமின்றி பலகைகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் தனது வியாபாரத்தை தடையின்றி முன்னெடுக்கலாம் என சுட்டிக்காட்டினார்.

அந்நியச்செலாவணியை அதிகளவில் பெற்றுக்கொடுப்பதில் சுற்றுலாத்துறை பாரிய பங்களிப்பை செய்கின்றது. ஆகவே இத்துறையுடன் தொடர்புபட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்து. சுற்றுலாத்துறை மேம்படுத்தல் நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்வதன் மூலம் 2014 ஆம் ஆண்டு 2மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இலக்கை அடையக்கூடியதாக இருக்கும்.

-நிரஞ்சனி ரோலண்ட்- .