பெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா?

Tuesday, September 21, 2010

ஜவுளிக் கடைக்கோ, ஷாப்பிங்குக்கோ மனைவிமார்கள் கூப்பிட்டால் கணவர்மார்கள் 'பீதி' அடைவது  உலகம் முழுவதும் பொதுவானதுதான். ஆனால் ஏன் பெண்கள் பெரும் செலவாளிகளாகவும், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் பிரியம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு சுவாரஸ்யமான தகவலை வெளிக்கொணர்ந்துள்ளது.

அதாவது மாதந்தோறும் பெண்களுக்கு வரும் மாதவிடாய் எனப்படும் மென்சஸ்தான் இதற்கு முக்கியக் காரணமாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது மென்சஸ் சமயத்தில் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் பதட்டமே ஷாப்பிங் ஆர்வத்தை பெண்களிடையே அதிகரிக்கிறதாம்.

மாதவிடாய் காலத்தில், எந்தக் கட்டத்தில் இருக்கிறார்களோ அதைப் பொருத்தே அவர்களின் செலவு செய்யும் பாங்கும் இருக்கும் என்று ஹெர்ட்போர்டு பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஷாப்பிங் செய்வதற்கும், பெண்களின் ஹார்மோன் மாற்றங்களுக்கும் தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து புகழ்பெற்ற நூல் ஆசிரியர் கேரன் பைன் கூறியதாவது, பெண்கள் தங்கள் நடவடிக்கைகளின் மாற்றத்திற்கு காரணம் என்னவென்பதைத் தெரிந்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இதன் மூலம் அவர்கள் செலவு செய்வதைக் கட்டுப்படுத்த முடியும். இனி பெண்கள் மென்சஸ் வரும் முன் ஆடைகள் வாங்கச் செல்ல வேண்டாம் என்று முடிவு எடுக்கலாம்.

ஏனென்றால், மென்சஸ் சமயத்தின்போதுதான் அவர்களுக்கு அதிக அளவில் செலவழிக்கத் தோன்றும் என்று அவர் கூறினார். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள 450 பெண்களிடம் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்களிடம் முந்தைய வாரத்தில் அவர்கள் செலவு செய்தது பற்றியும், அவர்களுடைய கடைசி 'பீரியட்ஸ்' தேதி பற்றியும் கேட்டனர்.

இதில் கலந்து கொண்ட பெண்களின் செலவழிக்கும் பழக்கம் மாதம் முழுவதும் மாறிக் கொண்டிருந்தது. மென்சஸ் வரும் முன் இருக்கும் பதட்டத்தில் பெண்கள் ஏராளமான ஆடம்பரப் பொருட்களை வாங்குகின்றனர். இந்த பதட்டம் குறைந்ததும் அவர்கள் குறைந்த அளவிலேயே செலவு செய்கின்றனர்.