சமீபத்தில் வால்பாறை சென்று வந்த என் நண்பர்கள் கொண்டு வந்த என் புருவங்களை உயர்த்தச் செய்தது. அவர்கள் அனுபவம் என்று சொல்வதைவிடஅனுபவத்தில் கொண்டு வந்த செய்தி எனலாம்.
காரில் பயணம் செய்த மூவரில் இருவர் அட்டையின் (Leech) கடிக்கு இலக்காகி ரத்தம் சொட்ட சொட்ட நனைந்த கால்களுடன் காருக்கு வெளியே குதித்து, சூழ்நிலை முழுவதும் புரிந்து இது அட்டைக் கடித்தான் என்று அவர்கள் உணர சற்று நேரம் பிடித்திருக்கிறது. கடித்த அட்டைப்பூச்சிகளில் ஒன்றை மட்டுமே அவர்கள் காரில் சீட்டுக்கு அடியில் கண்டு பிடித்தார்கள். இன்னொன்று பற்றிய தகவல் இல்லை. அவர்கள் இருவருக்குமே நிற்காமல் கால்களில் ரத்தம் வடிந்ததே தவிர, கொஞ்சமும் வலி இல்லை.
அட்டை அவர்கள் மீது ஏறியதோ, அவர்களைக் கடித்ததோ அவர்களுக்குத் தெரியாத காரணம் நம் வாயைப் பிளக்க வைக்கும் ஒரு அறிவியல் ஆச்சர்யம். அட்டை நம்மைக் கடிக்குமுன், கடிக்கப் போகும் பகுதி மரத்துப் போக ஒரு ஊசி போடுகிறது (local anesthesia). பின்னர் முடிந்த மட்டும் நம் ரத்தத்தை உறிஞ்சி, தன் உடலில் உள்ள ஒரு டஜன் சேமிப்புக் குழாய்களிலும் ரத்தத்தை சேகரித்துக் கொண்டபின் தன்னாலேயே கீழே உதிர்ந்து விடுகிறது. இயற்கையின் படைப்பை என்னவென்பது?