17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டிப் பாலம் வடக்கு மக்களின் கனவு நனவானது

Monday, January 17, 2011

 கடந்த காலங்களில் தேர்தல் பிரசார வாக்குறுதியாக 17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டி பால நிர்மாண கனவை நாமே நனவாக்கி இருக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.


மக்களுக்கான அபிவிருத்திகளை, தேர்தல் வாக்குறுதிகளாக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
அரசாங்கம் நாடெங்கிலும் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒரு அம்சமாகவே வடக்கில் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன எனவும் ஜனாதிபதி அவர்கள் கூறினார்.
சங்குப்பிட்டிப் பாலத்தை தேர்தல் பிரசார வாக்குறுதியாக 17 அரசியல் தலைவர்கள் கடந்த காலங்களில் முன்வைத்து மக்களை ஏமாற்றியுள்ளனர். நாம் அவ்வாறில்லை. ஒரு வருட குறுகிய காலத்தில் பாலத்தை நிர்மாணித்து, அதனை மக்களுக்குக் கையளித்தும் விட்டோமெனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.
வடக்கு மக்களும் அபிவிருத்தியின் முழுமையான பங்காளிகள் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பிரித்தானிய நிதியுதவி மூலம் 1032 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சங்குப்பிட்டி பாலம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான இப்பாலத்தின் நீளம் 288 மீற்றர். அகலம் 7.4 மீட்டர் பூநகரியையும் யாழ்ப்பாண நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் இரு வழிப்பாதையாக இப்பாலம் அமைந்துள்ளது. தெற்கிலிருந்து 320 கிலோ மீற்றர் என்ற குறுகிய தூரபயணத்தில் மக்கள் யாழ்குடா நாட்டை அடைய இப்பாலம் வழி வகுக்கின்றது.
கொழும்பிலிருந்து சிலாபம், புத்தளம், மன்னார் ஊடான இப்பாதையில் யாழ்ப்பாண குடாநாட்டுக்குப் பயணம் செய்வோர் ஏ 9 பாதையினூடாக செல்வதைப் பார்க்கிலும் சுமார் 120 கிலோ மீற்றர் தூரத்தை மீதப்படுத்திக் கொள்ள முடியும்.
வரலாற்று சிறப்பு மிக்க சங்குப்பிட்டி பாலத்தின் திறப்பு நிகழ்வு நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்:- சங்குப்பிட்டி பாலம் இன்று திறக்கப்பட்டதன் மூலம் வடக்கு மக்களின் நீண்ட காலக் கனவு நனவாகியுள்ளது.
கடந்த காலங்களில் பொன்னம்பலம் போன்றோர் இந்தப் பாலத்தை நிர்மாணித்துத் தருவதாக மக்களுக்கு தேர்தல் காலத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.
எதிர்கால சந்ததிக்காக ஐக்கிய இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு. அவர்கள் இந்த நாட்டில் சந்தேகம், பயமின்றி வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம். அதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளோம் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் தமிழ் மக்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து தமது உரையினை ஆரம்பித்தார்.
இதுவரை ‘ஏ 9’ வீதியூடாக மட்டுமே யாழ்ப்பாணத்துக்கு பயணிக்க முடிந்தது. இன்று முதல் ஏ -32 சங்குப்பிட்டிப் பாலம் ஊடாகவும் குறைந்த நேரத்திற்குள் யாழ்ப்பாணத்தை வந்தடைய முடியும். வடக்கின் வசந்தம் வழங்கிய வரப்பிரசாதம் இது.
எமது அரசாங்கம் சில வருடங்களுக்குள் நாடளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாம் எப்போதுமே சொல்வதைச் செய்பவர்கள். அதே போன்று செய்வதையே சொல்பவர்கள் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
வடக்கின் வசந்தம் மூலம் வீதி, வீடு, மின்சாரம், கல்வி, சுகாதாரம் என சகல துறைகளிலும் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. அரசாங்கம் இதற்கென பல கோடி ரூபாவினை செலவிட்டுள்ளது.
எதிர்காலத் திலும் பெருமளவு நிதியை செலவிடவுள்ளது. வருமானம் குறைந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்குப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். பல வருட காலங்கள் மக்கள் காணாத அபிவிருத்தி தற்போது வடக்கில் நடைபெறுகிறது.
மக்களாகிய நீங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது தாய்நாட்டை ஆசியாவின் உன்னத நாடாகக் கட்டியெழுப்பு வோம் எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
நன்றி தினகரன்