இரணைமடுக் குளமும் நீர்ப்பாசனமும்

Friday, January 21, 2011

இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 103 ஆற்று வடிநிலங்களில் வட மாகாணத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும்
மிகப் பெரியதுமான ஆற்று
வடிநிலம் கனகராயன் ஆற்று வடிநிலமாகும்.
இந்த ஆறு 90 கிலோமீற்றர் நீளமானதும் 906 சதுர கிலோமீற்றர் நீரேந்து பரப்பையும் (Catchments area) கொண்டுள்ளது. (Arjuna’s Atlas of Sri Lanka page 26).
இது சேமமடுக் குளத்தில் உற்பத்தியாகி வடக்கு நோக்கி ஓடி தட்டுவன்கொட்டி ஊரியான் பகுதியை அண்டிய ஆனையிறவு கிழக்கு கடனீரேரியில் சங்கமிக்கின்றது. இதன்மூலம் வருடம் ஒன்றிற்கு சராசரி 24 மில்லின் கனமீற்றர் நீர் வெளியே செல்கின்றது எனக்கணிப்பிடப்பட்டுள்ளது. (The National Atlas of Sri Lanka – 1989).
கனகராயன் ஆற்றின் வடி நிலப்பரப்பில் சேமமடுக்குளம், கனகராயன்குளம், இரணைமடுக்குளம் போன்ற பெரிய நீர்ப்பாசனக் குளங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் உள்ளன. கனகராயன் ஆற்று வடிநிலத்தினுள் அமைந்து காணப்படுவதும் வடமாகாணத்தில் மிகப்பெரியதுமான நீர்த்தேக்கம் இரணைமடு ஆகும்.
கனகராயன் ஆற்றினால் ஆனையிறவு கடல் நீரேரியில் வீணே கொட்டப்படும் நீரைத்தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டியதன் நோக்கத்தை 1879 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச அதிபராக இருந்த சேர் வில்லியம் துவைனம் என்பவர் அரசிற்கு வற்புறுத்தினர்.
இதனை அடுத்து இலங்கை நீர்ப்பாசனக் பகுதியினரால் இரணைமடு நீர்த்தேக்கத்தினை அமைக்கும் பணி 1902 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1920 ஆம் ஆண்டு நிர்மாணித்து முடிக்கப்பட்டு 22 அடி உயர நீரைக் கொள்ளளவாகப் பெறும் நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
இது கடல் மட்டத்திலிருந்து 26.7 மீற்றர் (89அடி) உயரத்தில் 40,000 ஏக்கர் அடி நீரைத் தேக்கக்கூடியதாக அமைக்கப்பட்டது. இரணைமடுக்குளத்தின் (கட்டுமானப் பணிகள்) புனரமைப்பு வேலைகள் நான்கு முறைகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பௌதிகப் பின்னணி
வடிகாலின் அமைப்பினையும் விருத்தியினையும் தீர்மானிப்பதில் பௌதிகப் பின்னணி முக்கிய இடம் வகிக்கின்றது. இவற்றில் புவிச்சரிதவியல், தரைத்தோற்றம், மண்வளம், காலநிலை, இயற்கைத்தாவரம் போன்றன பிரதான இடத்தினை பெற்றிருக்கின்றபோதும் இங்கு தரைத்தோற்றமும் காலநிலையும் சுருக்கமாக ஆராயப்பட்டுள்ளது.
தரைத்தோற்றம்
தரையின் மேற்பரப்பு அம்சங்களையும் தரையுயர்ச்சி மற்றும் குத்துயர வேறுபாடுகள் போன்றவற்றையும் விளக்குவதே தரைத்தோற்றமாகும்.
கனகராயன் ஆற்றுவடிநிலம் 100 மீற்றர் உயரத்திற்கு குறைந்ததாகவும், மென்சாய்வினை உடைய தட்டையான மேற்பரப்பையும் கொண்டு காணப்படுகின்றது.
இத்தகைய தரைத்தோற்ற இயல்பிற்கேற்ப இவ்ஆறு 90 மீற்றர் உயரப் பிரதேசத்தில் அமைந்துள்ள சேமமடுக் குளத்தில் உருவாகி தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய சமவெளி ஊடாகப் பாய்ந்து 30 மீற்றர் உயரத்தினுள் இணைந்து காணப்படும் இரணைமடு நீர்த்தேக்கத்தினுள் நீரினைச் செலுத்தி மேலதிக நீர் 3 மீற்றரிலும் குறைந்த உயரமுடைய ஆனையிறவு கடனீரேரியினுள் சென்றடைகின்றது.
இரணைமடு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுப்பகுதி மாத்திரமே கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 106,500 ஏக்கரடி நீரினைத் தேக்கக்கூடிய அதனது ஏனைய பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தினுள் அமைந்துள்ளது.
காலநிலை
காலநிலையைப் பொறுத்தவரையில் வெப்பநிலையும் மழைவீழ்ச்சியும் முக்கியம் பெறுகின்றன. இரணைமடுக்குளப் பிரதேசத்தின் உயர் வெப்பநிலையாக 90 பாகை பரனைற்றும் இழிவு வெப்பநிலையாக 73 பாகை பரனைற்றும் நிலவுகின்றது.
மே மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரை அதிக வெப்பநிலை இங்கு நிலவும். கனகராயன் ஆற்று வடிநிலப்பிரதேசத்திற்கு வடகீழ் பருவக்காற்றின் மூலம் மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.
இக்காற்று வங்காள விரிகுடாவிற்கு ஊடாக வருவதனால் ஈரத்தன்மையைப் பெற்று வரண்ட வலயத்தில் அதனை படியச்செய்வதன் மூலம் வடிநிலப்பிரதேசம் முழுவதும் வடகீழ் பருவக்காற்றால் ஒக்ரோபர் தொடக்கம் பெப்ரவரி வரை மழைவீழ்ச்சியைப் பெறச்செய்கின்றது.
இத்தகைய மழைவீழ்ச்சி, வெப்பநிலை நிலைமைகளினால் வடிநிலப் பிரதேசத்தில் அமைந்து காணப்படும். நூற்றுக்கும் மேற்பட்ட குளங்களில் நீர் தேக்கப்பட்டு சிறு சிறு கிளையாறுகளினால் பிரதான ஆற்றினுள் சேர்க்கப்பட்டு நவம்பர் மாத முற்பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் கனகராயன் ஆறானது ஏறத்தாழ மூன்று மாதங்கள் வரை ஓடி பின் பெப்ரவரி மாதமளவில் நீரின்றி அல்லது அதன் சில இடங்களில் மட்டும் நீரைக் கொண்டதாகக் காணப்படும். இத்தகைய நிலைமைகளே இரணைமடுக்குளப் பிரதேசத்திலும் காணப்படுகின்றது.
திருமதி சுபாஜினி உதயராசா
புவியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

நீர்ப்பாசனம்

1920களில் இரணைமடுக்குள நிர்மாண வேலைகள் குறிப்பிடத்தக்க அளவில் நிறைவுபெற்ற நிலையிலும்கூட இந்நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்கையில் சாதனை படைக்கும் நிலை அப்போது காணப்படவில்லை.
இரணைமடுக்குளம் அமைக்கப்பட்ட காலத்தில் அதன் முன்னணி நிலத்தில் மானாவாரி நெல் வயல்கள் இருந்தன. அவை பரவிப்பாஞ்சான் என்ற கண்டமாக விளங்கின. கனகராயன் ஆறும் திருவையாறும் தங்குதடையின்றிப் பரவிப்பாய்ந்த பகுதி இதுவாகும்.
இரணைமடுக்குளம் அமைக்கப்பட்டதும் 1936இல் பரவிப்பாஞ்சான் பகுதியில் வயல்காணிகள் அவற்றை செய்கை பண்ணியவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டன. இதே ஆண்டில் கணேசபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட குடியான்கள் குடியேற்றத்திட்டம் மூலம் முதலாவது நீர்ப்பாசன விவசாய செய்கைமுறை இப்பிரதேசத்தில் இடம்பெறத் தொடங்கியது.
1950களை அடுத்து யாழ் குடாநாட்டின் சனத்தொகைப் பெருக்கமும், நிலப்பஞ்சமும் வன்னிப் பிரதேசத்தின் குடியேற்றங்களைத் தூண்டுவித்தன. இதன்பொருட்டு இரணைமடுக்குளத்தின் இடது கரைக் கால்வாயை அடிப்படையாகக்கொண்டு 1950இல் உருத்திரபுரம் 10ஆம் வாய்க்கால் குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டது.
இரணைமடுக்குளத்தின் இடதுகரைக்கால்வாயை அடுத்துக் காடாகக் கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விருத்தி செய்ய முடியும் என உணரப்பட்டபோது இரணைமடுக்குளத்தின் நீர்க் கொள்ளளவை அதிகரிக்க வேண்டிய அவசியமேற்பட்டது. இதனால் 1951இல் இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு மீண்டும் 28 அடியாக உயர்த்தப்பட்டு நீர்க்கொள்ளளவு 71,000 ஏக்கரடியாக்கப்பட்டதுடன் 1952இல் உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் குடியானவர் குடியேற்றத்திட்டமும் உருவாக்கப்பட்டது.
இரணைமடுக்குளத்திலிருந்து வலதுகரைக் கால்வாய் 1952இல் அமைத்து முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1953இல் வட்டக்கச்சி குடியேற்றத்திட்டமும் 1954இல் மூன்றாவது தடவையாக இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு 30 அடியாக உயர்த்தப்பட்டு அதன் நீர்க்கொள்ளளவு 82,000 ஏக்கரடியாக அதிகரிக்கப்பட்டு 1955இல் ஆறாவது குடியேற்றத்திட்டமாக இராமநாதபுரமும் உருவாக்கப்பட்டது.
இவ்வாறாக இரணைமடுக்குளத்தின் கீழான குடியானவர் குடியேற்றத்திட்டங்கள் மட்டுமன்றி 1955இல் கண்டாவளையில் (1740 ஏக்கர்) 696 ஹெக்ரேயர் தாழ் நிலங்கள் 4 ஹெக்ரேயர் (10 ஏக்கர்) வீதமும், 1958இல் புளியம்பொக்கணையில் 800 ஹெக்ரேயர் (2000 ஏக்கர்) தாழ்நிலங்கள் நான்கு ஹெக்ரேயர் வீதமும், 200 மத்தியதர வகுப்பினருக்கும் வழங்கப்பட்டது.
மேலும் திருவையாற்றில் இரணைமடுக்குளத்தை சூழ்ந்த பரப்பில் 108 ஹெக்ரேயர் (270 ஏக்கர்) 27 மத்தியதர வகுப்பினருக்கும் வழங்கப்பட்டது. இவற்றுடன் இராமநாதன் கமம், புதுமுறிப்புக்குளம், பகுதியிலும் மத்தியதர வகுப்பினர் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இவை தவிர 1966இல் இரணைமடு ஏற்று நீர்ப்பாசன வசதியோடு திருவையாறு படித்த வாலிபர் திட்டம் மூன்று கட்டங்களாக உருவாக்கப்பட்டு 425 இளைஞர்களுக்கு 510 ஹெக்ரேயர் (1275 ஏக்கர்) நிலப்பரப்பும், திருவையாறு படித்த பெண்கள் திட்டத்தில் 200 ஹெக்ரேயர் நிலப்பரப்பு 25 பெண்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
திருவையாறு திட்டக் காணிகளுக்கு நீர் வழங்கும் பொருட்டு 1977ஆம் ஆண்டு மீண்டும் நான்காவது தடவையாக இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு 34 அடியாக உயர்த்தப்பட்டு நீர்க்கொள்ளளவு 106,500 ஏக்கர் அடியாக அதிகரிக்கப்பட்டது.
இரணைமடு நீர்த்தேக்கத்தினால் நீர்ப்பாசனம் செய்யப்படும் முக்கிய பரப்பாக கனகராயன் ஆற்று வடிநிலத்தின் கழிமுகப்பகுதியான கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை உதவி அரசாங்க அதிபர் பிரிவுப் பிரதேசம் விளங்குகின்றது.
இங்கு வருடந்தோறும் பெரும்போகத்தில் மாத்திரம் 30,480 மீற்றர் நீளமுடைய பிரதான கால்வாய்கள், 13,860 மீற்றர் நீளமுடைய கிளை வாய்க்கால்கள், 156,540 மீற்றர் நீளமுடைய வயல் வாய்க்கால்கள் என்பவற்றின் மூலம் 8,352 ஹெக்ரேயர் பரப்பிற்கு பாசனம் செய்யப்படுகின்றது.

எதிர்காலத் திட்டங்கள்
இலங்கையின் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் கனகராயன் ஆற்று வடிநிலப்பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நீர்த்தேக்கமான இரணைமடுக்குளம் H.T.S Ntl; (H.T.S.Ward) என்ற நீர்ப்பாசனப் பணிப்பாளரினால் 1902ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்ட அறிக்கை சார்ந்து நிர்மாணிக்கப்பட்டதாகும்.
90 கிலோமீற்றர் நீளமான கனகராயன் ஆற்றை மறித்து கட்டப்பட்ட அணை மூலம் இந்நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தியை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தபோதும் வரண்ட வலயத்தின் மிகப்பெரும் வரட்சிப் பகுதியாகிய யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்வள அபிவிருத்தியுடன் இது தொடர்புபட்டிருக்கின்றது. இதற்கென நாட்டின பெரும் திட்டமென வர்ணிக்கப்படும் மகாவலிகங்கை அபிவிருத்தி திட்டத்துடனும் இது இணைப்புச் செய்யும் முன்மொழிவையும் கொண்டிருக்கிறது.
இலங்கையின் நிலப்பரப்பில் 4,000 சதுரமைல் பிரதேசத்தை உள்ளடக்கும் 900,000 ஏக்கர் பரப்புக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மகாவலி கங்கை பாயும் 43 இலட்சம் சதுரஅடி நீரை நாட்டின் உலர் வலயத்திற்கு பயன்படுத்தும் இப்பெரும் திட்டத்துடன் இக்குளம் இணைக்கப்பட்டிருக்கிறது.
1902இன் வேலைத்திட்ட அறிக்கையானது NCP வாய்க்கால் ஒன்றை மகாவலி ஆற்றிலிருந்து கனகராயன் ஆற்றுக்கு திருப்பும் நம்பிக்கையைக் கொண்ட முன்மொழிவும் இணைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையை தொடர்ந்து இரணைமடுக்குள நீர்ப்பாசன நடவடிக்கையிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இரணைமடுவிலிருந்து குழாய் மூலம் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு நீர் விநியோகம் செய்யும் திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்படுகின்றது.
அதாவது யாழ்ப்பாணப் பிரதேசத்திற்கான குடிதண்ணீர் உட்பட நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுக்குளத்திலிருந்து குழாய்மூலம் ஆனையிறவு ஊடாக யாழ் குடாவிற்கு நீரை எடுத்து வந்து விநியோகம் செய்வதற்கான திட்டம் குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இத்திட்ட நடைமுறைக்காக சுமார் 300 கோடி ரூபா வரை தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப்பாரிய நீர்ப்பாசனத் திட்டம் சாத்தியமாகும். பட்சத்தில் சில வருட காலத்தில் இத்திட்டம் பூர்த்தி அடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டம் செயற்படுத்தப்படும் போது இரணைமடுக்குளத்தின் கட்டு மேலும் உயர்த்தப்பட்டு செப்பனிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தால் குடாநாட்டில் நிலத்தடி நீர் பயன்பாடு குறையும் சாத்தியம் உண்டெனவும், ஆனையிறவு ஊடாக அமைக்கப்படும் நீர்க்குழாய் கொடிகாமத்திலிருந்து பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுமெனவும் எதிர்காலத்தில் கிணற்று நீரின் தன்மைகள் மாறிவரும் நிலையில் (உவராதல்) இத்திட்டம் அவசியமானதெனவும் கருதப்படுகின்றது.
இரணைமடுக்குளத்தில இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தில் முதலாவதாக இரணைமடுக்குளம் ஆழமாக்கப்பட்டு குளக்கட்டுக்கள் உயர்த்தப்பட்டு நீர்க்கொள்ளவை அதிகரிக்க வேண்டும். இல்லையேல் கிளிநொச்சி மாவட்ட விவசாய நிலப்பரப்புக்கள் யாவும் நீர்ப்பற்றாக்குறைவால் பயன்படுத்தமுடியாத நிலை தோன்றும். இதனால் விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறாக இரணைமடு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு காலத்திற்குக்காலம் உயர்த்தப்பட்டு நீர்ப்பாசனம் செய்யப்படும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டாலும் இன்றும் பல குறைபாடுகளைக்கொண்டே காணப்படுகின்றது.
தற்போதைய நிலையில் கடந்த பல வருடங்களாக குளம் புனரமைப்பு செய்வதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் மேற்கொள்ளாமல் சிறுசிறு பராமரிப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு மட்டும் நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது. இதனால் இடது, வலது கரை வாய்க்காலில் உள்ள கட்டுமானங்கள் முழுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.
அணைக்கட்டும் பாதிக்கப்பட்டு வலுவிழந்த நிலையில் உள்ளது. வான் பகுதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் நீர் முகாமைத்துவம் மேற்கொள்ள முடியாது. கணிசமான அளவு நீர் வீண்விரயமாகின்றது. இதனால் எமது வளத்தின் பெரும் பகுதியை நாம் இழந்து கொண்டிருக்கின்றோம்.